Friday 24 July 2015


வெள்ளிச் சிரிப்பு  

நரசிம்மனுக்கு அன்றைய பொழுது சுமாராகவே விடிந்ததாகத் தான் தோன்றியது, அதற்குக் காரணம் அவன்முந்தைய தினம் வாங்கி வந்த காய்கறிகளின் தரத்தைப்பற்றியும், அவனுடைய ப்ரசித்திப் பெற்ற ஸாமார்த்தியத்தையும் அவன் மனைவி விடியற்காலையிலிருந்து வறுத்தெடுத்துக்கொண்டிருந்தாள்.
 நரசிம்மன்  ஒருவிதமான ஸமாதி நிலையை அடைய முயற்சித்துக்கொண்டிருந்தான். ஆனால் அது அவனுக்குக் கை கூடவிடாமல் மனைவி தூஷண மழை பொழிந்தவண்ணமிருந்தாள்

"தேடித் தேடி உங்களைப்போய் என் தலையில் கட்டிவிட்டார் என் அப்பா" என்று வழக்கமான பல்லவியைப் பாடி விட்டு ஒய்ந்தாள். அவள் தீர்க்க தரிசியாயிருந்தால் நரசிம்மன் அன்று செய்யப்போகும் காரியம் தெரிந்திருந்தால் ஜாக்ரதையாயிருந்திருப்பாள். 
  நரசிம்மனின் மாமனார்  தன் ஒரே பெண்ணை பலமுறை வந்து நரசிம்மனை பார்த்து மிகுந்த திருப்தியுடன்  தாரைவார்த்துக் கொடுத்தார். நரசிம்மன் தன்னுடைய அலுவலகத்தில் நல்ல பேரெடுத்தவன்தான்.  ஆனால் உலக வழக்கதினையொட்டிய சில விஷயங்களில் அவன் சுமார்தான். அவனுடைய தாயார் இந்தக்குணாதிசயத்திநைக் கொண்டாடுவாள் "பிள்ளை சூதுவாது அறியாதவன் " என்று.  ஆனால் கடவுள்  சரியாக ஜோடிச் சேர்த்தார். நரசிம்மனின் மனைவி கமலா விலை மோரில் வெண்ணெயெடுப்பவள்.

அலுவலகத்துக்கு நேரமாகிவிட்டது என நரசிம்மன் சாப்பிட உட்கார்ந்தான்.கல்யாணத்தின் போது அவன் மாமனார் அளித்த வெள்ளிச் சொம்பில் தான் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்துக்கொண்டிருந்தான்.. நாளாவட்டத்தில் அந்தச் சொம்பின் அடியில் சிறிது நசுங்கியிருந்தது. அரைச்சொம்பில் தண்ணீர் வைத்தால் பைசா கோபுரம் போல் சாய்ந்து நிற்கும்.
இலையில் சாதத்தைப்போட்டு கமலா சொம்பில் தண்ணீர் வைத்தவுடன் சொம்பு ஒரு பக்கமாய் சாய்ந்து தண்ணீர் கொட்டி இலை பூராவும் நனைந்து விட்டது. " ஒரு சொம்பை ஒடுக்குத் தட்டி எடுத்துண்டு வரத் தெரியலை ஒரு ஆம்பளைக்கு, சொம்பு மாமனார் வாங்கித் தான் தருவார்., நசுங்கிப்போனா ஒடுக்கு எடுத்துமா தருவார் என்றாள். நரசிம்மன். உடனே "நசுங்கற மாதிரி ஏன் சொம்பு வாங்கணும் ? என்றான். கமலா முறைத்தாள். இந்த வக்கணைக்கு ஒண்ணும் குறைச்சலில்லை, தேரடி தெருவில் வெள்ளிக் கடை இருக்கு. சாயங்காலமாய் போய் குடுத்துக் கூட இருந்து கையோட வாங்கிண்டு வாங்க" என்றாள்.  

நரசிம்மன் " இப்பவே போய் குடுத்து வாங்கிண்டு வரேன், தொண தொணன்னு உயிரை எடுக்காதே' என்று சொல்லிவிட்டு பையில் சொம்பை எடுத்துவைத்துக்கொண்டு வெள்ளிக் கடைக்குச் சென்றான்.
கடையில் ஒரு 18 வயது பையன் மட்டுமிருந்தான். நரசிம்மனைப்பார்த்தவுடன் 
"என்ன சார், சொம்பு  ஒடுக்கு எடுக்கணுமா? என்றான். 
பையிலிருந்து சொம்பை எடுத்துக் கொடுத்தான் நரசிம்மன். பையன் ஒரு பெரிய "புன்னகை"யுடன் சொம்பை வாங்கி வைத்துவிட்டு  "சார் ஒரு ஹவர் கழிச்சு வா சார்" என்றான் இல்லப்பா கையோட குடுப்பா என்றான் நரசிம்மன்.
'என்ன சார், நம்பிக்கயில்லையா ?  கரியில்ல சார் , வாங்கினு வந்து  பத்த வச்சு சொம்பக் காச்சணும், அப்பதான் ஒடுக்கு, நசுங்கல் அல்லாத்தயும் எடுக்கலாம் சார். என்றான்  100 ஆகும் சார் என்றான் பையன். இல்லப்பா நான் வெயிட் பண்றேன், அதில உனக்கு என்ன கஷ்டம் என்றான் நரசிம்மன்.

இல்ல சார் ! வேற வேல ஏதாவதிருந்தால் முடிச்சுட்டு வா சார் என்றான் பையன் விடாக் கண்டனாய்.

நரசிம்மன் அரை மனதுடன் "சரி மார்க்கெட் வரைக்கும் போய்விட்டு வரேன்" என்றபடி பையை சுருட்டியபடி கிளம்பினான். 

நரசிம்மன் சொன்னபடி அரை மணி நேரம் கழித்து வந்தான். கடை பூட்டியிருந்தது. நரசிம்மனுக்கு தப்புபண்ணிவிட்டோமோ என்று தோன்றியது.
பக்கத்தில் ஒரு இஸ்திரி கடை இருந்தது. ஸரி அந்தக் கடைக்காரரிடம் கேட்டுப்பார்க்கலாம் என்று  அவரைக் கூப்பிட்டான். "சார் பாத்திரக் கடைப் பையன் எங்கே சார் ?" அவர் உடனே " அந்த நாதாரி சொல்லிட்டாப் போறான், என்னா முதலாளி வீட்டு வரைக்கும் போயிருப்பான். வந்தா நீங்க தேடிக்கினு வந்தீங்கன்னு சொல்றேன்" என்றார்.  அரை மனதுடன் நரசிம்மன் திரும்பினான். கமலாவின் குறுக்குக்கேள்விகளை நினைத்து  அவன் இரத்த அழுத்தம் கூடியது. வீட்டில் நுழைந்தவுடன் கமலா கேட்டாள்."சொம்பு எங்கே ? எல்லாம் ரிப்பேர் பண்ணித் தருவான் என்றான் நரசிம்மன்.  அதற்குபின் கமலா ஒன்றும் கேட்கவில்லை.  மறு நாள் அலுவலகத்திலிருந்து வரும் போது பட்டறைக்கு வந்து பார்த்தான். மூடியிருந்தது. நரசிம்மனுக்கு அடிவயிற்றில் அமிலம் சுரந்தது. இஸ்திரி கடைக்காரர் "இன்னா சார், பையன் நேத்து சாயந்தரம் போனவந்தான், இன்னும் வரலை. நடுவுல ஒரு தபா முதலாளி கூட வந்துட்டுப்போனாரு, அவர் மூஞ்சியே ஸரியில்ல. எதையாவது லவுட்டிகிட்டுப் போய்ட்டானோ என்னவொ/ ஸார் நீங்க ஏதாவது குடுத்து வச்சிருக்கீக்களா ? என்று கேட்டார். நரசிம்மன் ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்குப் போனான். உள்ளே போனவுடன் கமலா " சொம்பு எங்கே ? கொடுத்துட்டானா என்றாள். . கடை பூட்டியிருக்கு என்றான்  நரசிம்மன்.

அக்கம்பக்கத்தில் விஜாரிக்கணும் இது கூடவா தெரியாது ! என்று கமலா கணைகளை வீசத் துவங்குமுன் வாசலில்  ஸார் என்று குரல் கேட்டது.
நரசிம்மன் வாசலுக்கு வந்தான். ஒரு நடுத்தர வயது மனிதர் நின்றிருந்தார்..
நரசிம்மன் அவரை விசாரிக்கும் முன்பே, " ஸார், வெள்ளிப் பட்டறை கடைக்காரார் நானு, முந்தாநாள் ரிப்பேருக்கு ஏதாவது  சொம்பு குடுத்தீங்களா !
ஆமாம் என்றான் நரசிம்மன்.

ஸார் நம்ம வீட்ல வந்து நா இல்லாத போது கரியும் கிஸ்ணாயில் வாங்கணும்னு சொல்லி ஒரு ரெண்டாயிரம் வாங்கிட்டுப் போயிட்டான். அவன் வீட்ல விசாரிக்கப்போனா எங்கே போனானு தெரியலேனு அவன் அம்மாக்காரி சொல்றா. இஸ்த்ரி கடைக்காரர் சொன்னப்பறம் தான் தெரியும் நீங்க ரிப்பேருக்கு சொம்பு கொடுத்தீங்கனு. 
அதற்குள் கமலா வந்துவிட்டாள்.

என்ன சொம்பைத்தூக்கிக் கொண்டு ஓடிப்போய்ட்டானா?

கமலாவின் கூச்சல் ஈரேழு பதினான்கு உலகங்களிலும் கேட்டது. மூப்பத்து முக்கோடி தேவர்களில் பேர் பாதிக்கு அந்த சத்தம் கேட்டது. நரசிம்மன் வேர்த்து கைகால்கள் நடுங்க நின்றிருந்தான். பட்டறைக்காரர் துக்கம் விசாரிக்க வந்தவர் போல் சில நிமிஷங்கள் மௌனமாயிருந்து விட்டு "தகவல் தெரிந்தால் சொல்லியனுப்பறன் சார் " என்று சொல்லி விட்டு விடை பெற்றார்..
நரசிம்மன் தனியொருவனாய் கமாலவின் தாக்குதல்களுக்கு இரையாக தயாரானது போல் நின்றான்.

  நரசிம்மன் சொம்பைத் தொலைத்த விவரம் உடனே அவன் மாமானாருக்குப் போய் சேர்ந்தது.. ஸாமர்த்தியம் இல்லாத மாப்பிள்ளை ஒரு தடவைக்கு இரண்டு தடவை விசாரிச்சப்புறம் ரிப்பேருக்குக் கொடுத்திருக்கணும். என்ன பண்றது எல்லாம்  விதி. இந்த மாதிரி ஒரு மாப்பிள்ளை ! என்று புலம்பித் தள்ளிவிட்டு நட்பும் சுற்றமும் புடை சூழ மாப்பிள்ளையை பார்க்க விரைந்தார்..

தைமூர் படையெடுப்புப் போல் மாமானர் வீட்டுக்காரர்கள் அனைவரையும் கண்டவுடன். நரசிம்மன் தான் களத்தில் தனியாயிருப்பதையும் சங்கத் தமிழ் சொன்ன "கையறு:" நிலையில்  இருப்பதையும் உணர்ந்து தைர்யத்தை வரவழைத்துக் கொண்டு கேள்விக் கணைகளை எதிர்கொள்ளத் தயாரானான்.

போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுத்தாச்சா ? இது மச்சினன்.

கொடுத்தாலும் கிடைக்குமா !? அவன் மனைவி
எல்லாம் நேரம்னாலும் நாம்பளும் ஜாக்ரதையானயிருக்கணும் !
மாமியாரின் அறிவுரை/இடித்துரை.

எல்லாரும் ரவுண்டு கட்டி நரசிம்மனுக்கு ஆலோசனை மழை பொழிந்தனர்.

நன்னாச் சொல்லுங்கோ எதை நம்பி அந்தத் திருடன் கிட்ட ஸொம்பைக் கொடுத்தார்னு கேளுங்கோ என்று அழுகிற பாவனையில் கேட்டாள் கமலா.

பதில் சொல்லும் மாப்ளே" என்றார் மாமனார்..

நரசிம்மன் தொண்டையைக் கனைத்துக்கொண்டு 'சொம்பை வாங்கும் போது அவன் சிரித்தான் மாமா."
அதுக்காக சொம்பைக் கொடுத்துடறதா?

இதற்கு நரசிம்மன் சொன்ன பதில்  யாரும் எதிர்பாராதது.

நீங்க என்ன முதல் தடவை பார்க்க வந்தபோது "சிரிச்சேளே" அதே மாதிரி இருந்தது. அதனால் தான் நம்பினேன்.

அங்கு ஒரு பெரிய அமைதி நிலவியது.